அன்பு மகனே ! நீ கூறுவது வாஸ்தவம் தான். தனக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த குருவை ஒருவன் பலர் முன்னிலையில் புகழ்ந்து பேசலாம். ஆனால், அவர் கற்றுத்தந்த மந்திரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கிய மந்திரங்களை பிறரறிய வெளிப்படுத்துபவன், நரகத்தையே அடைவான். ஓம் என்பது சாதாரணமான மந்திரமல்ல. உலகம் உருவாவதற்குரிய ரகசியங்களை உள்ளடக்கிய மந்திரம். சரி... மகனே! அதன் பொருள் எனக்கும் கூட தெரியாது. அதற்காக பிரம்மனைச் சிறையில் அடைத்தது போல் என்னையும் அடைத்து விட மாட்டாயே ! என்று சொல்லிச் சிரித்தார் சிவன். சிவனால் உருவாக்கப்பட்டதும் அவருக்கே மட்டுமே பொருள் தெரிந்த ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தனக்குத் தெரியாதென்று அவர் ஏன் மறைத்தார் தெரியுமா ? அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பாபா பிளாக்ஷீப் ஹேவ் யூ எனி உல் என்ற ஆங்கிலப்பாட்டு மிக நன்றாகவே தெரியும். ஆனால், தெரியாதவர்கள் போல் நடித்து, எல்.கே.ஜி., படிக்கும் தங்கள் குழந்தையைச் சொல்ல வைத்து கேட்பார்கள். காரணம், தங்கள் குழந்தையின் மழலை மழையில் நனைய வேண்டுமே என்பதற்காக, இப்படித்தான் சிவனுக்கும் ஆசை. தனக்கு அதன் பொருள் தெரிந்தாலும், தன் மகனின் வாயால் கேட்டால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் தான். அது மட்டுமல்ல, தன்னை விட தன் மகன் உயர்ந்தவன் என்பதை பக்தர்களுக்கு எடுத்துக்காட்ட, வயதில் பெரியவராயினும், தன்னிலும் சிறியவர்களுக்கு சில விஷயங்கள் தெரியுமானால், அதைக் கேட்டறிவதில் தவறு இல்லை என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காக ! இதற்காக கைகட்டி, வாய் பொத்தி, முட்டுக்காலிட்டு, முருகன் ஆசனத்தில் இருக்க, மிகவும் பணிவாக அவரருகில் கீழே அமர்ந்து காதைக் கொடுத்தார். தேவர்களெல்லாம் பூமாரி பொழிந்தனர், எங்கும் நிசப்தம். இளைஞனாயிருந்த முருகன் பால முருகனாக மீண்டும் மாறினான். தந்தையின் காதில் மந்திரத்தின் பொருளைச் சொன்னான்.
ஆன்மிக உலகம் ஓம் என்ற பதத்திற்கு பல விளக்கங்களைச் சொல்கிறது. இதற்குரிய பொருளாக கணிக்கப்படுவது என்னவென்றால், இந்த உலகமே நான் தான் என்பதாகும். ஆம்...சிவன் தன் ஆத்மாவின் வடிவமாக முருகனைப் பிறப்பித்தார். அவரது ஒட்டுமொத்த சக்தியும் அவருக்குள் அடக்கம் என்று பொருள் சொல்வதுண்டு. பின்னர் கயிலை திரும்பிய சிவன், மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் மனம் மகிழ்ந்தாள். முருகப்பெருமானின் புகழ் வைகுண்டத்திலும் பரவியது. அவனது ஆணையால் தான், திருமால் உலகத்திலுள்ள அரக்கர்களை அழித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் முருகனுக்கு மேலும் பெருமை தந்தது. இதற்காக அவர் தசாவதாரம் எடுத்து வருவதாக சிவனே பார்வதியிடம் சொன்னார். சூரபத்மனை அழிக்க வந்த தன் மருமகனுக்கு தன் சக்தியை வழங்கவேண்டும் என்று விரும்பினார் உபேந்திரன் என அழைக்கப்படும் திருமால் பாற்கடலில் பையத்துயின்ற அந்த பரந்தாமன், ஒருமுறை விழித்துப் பார்த்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கொடிகளை ஒத்த இடையை உடைய அழகிய பெண்கள் வெளிப்பட்டனர். தந்தையே வணக்கம் ! என்ற அப்பெண்களில் முதலாவதாக வந்தவள் அமுதவல்லி, அடுத்து வந்தவள் சவுந்தர்யவல்லி. இருவரையும் உச்சிமோந்த திருமால், என் அன்பு புத்திரிகளே ! நீங்கள் இருவரும், என் மருமகன் முருகனுக்காக பிறந்தவர்கள். அவனின் புகழ் எல்லையற்றது, என்று கூறி முருகனின் அருமை பெருமையை எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட அந்த பெண்களின் உள்ளத்தில், முருகனைப் பார்க்காமலேயே காதல் பிறந்து விட்டது.
தங்கள் அன்புக்காதலனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்குள் இருந்தது. ஒருநாள் அமுதவல்லி, தன் தங்கையிடம் சவுந்தர்யா ! நாம் முருகப்பெருமானுக்காகவே பிறந்திருக்கிறோம். உலகில் வல்லவன் யாரோ, அவனை அடைவதில் பெண்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். வீரம்மிக்க ஆண்கள் உலகில் ஆங்காங்கே தான் இருப்பார்கள். தன் பக்கத்தில் இருப்பவனுக்கும், நண்பனுக்கும், சக மனிதனுக்கும் துன்பமிழைப்பவன் வீரன் அல்ல. பிறரது நன்மைக்காக தன் உயிரைக் கொடுக்கத் துணிபவன் எவனோ, அவனே சுத்த வீரன். முருகப்பெருமான் தனக்காக அல்லாமல், உலக நன்மை கருதி, சூரபத்மனை அழிக்கப் பிறந்திருக்கிறார். அவர் நம் கணவரானால், நம்மைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யாருமிருக்க முடியாது. அமிர்த சவுந்தர்ய முருகன் என்று அவர் பெயர் பெறுவார். அமுதமாகிய நான் அவருடன் இணைந்தால், அழிவில்லாத புகழ் பெறுவேன். சவுந்தர்யமாகிய நீ அவருடன் இணைந்தால், அவர் இளமைப் பொலிவுடன் திகழ்வார், என்றான். இருவரும் என்றேனும் ஒருநாள், முருகன் தங்களைத் தேடி வருவான் என எதிர்பார்த்தனர். காலம் சென்றதே தவிர முருகன் வரவில்லை. எனவே, இருவரும் தங்கள் அலங்காரங்களைக் களைந்து விட்டு, வெள்ளை பட்டு உடுத்தி, நாணல் காட்டுக்குச் சென்றனர். இடுப்பில் ஒட்டியாணத்துக்கு பதிலாக, நாணல்புல்லை கயிறாகத் திரித்து கட்டிக் கொண்டனர். முருகனின் புகழ்பாடி தவத்தில் ஆழ்ந்தனர். நீண்ட நாட்களாக தவம் தொடர்ந்து. அந்த கன்னியரின் தவத்தை மெச்சிய முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றினார். அப்பெண்கள் பேருவகை அடைந்தனர். என்ன செய்ய வேண்டுமென்பது புரியவில்லை. கைகூப்பி வணங்கினர். ஓடிவந்து, ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.
No comments:
Post a Comment