அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!
சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்” தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.
சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும் வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.
“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள் போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள். அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய் விடுகிறது”
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.
இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.
மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப் படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.
ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.
இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.
அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.
ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி பலனடைய முடியும்.
மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.
இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.
வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன். அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப் படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.
அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன் ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.
எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?
வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.
ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இனி கீதையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப் பார்ப்போம்.
பாதை நீளும்.....
No comments:
Post a Comment