நவநாகரீகம் என்ற பெயரில் உடலை நாம் மிகவும் கடினமாக நடத்துகிறோம். உடல் தனது வளைவு தன்மையை சிறுவயதில் இழந்து விடுகிறது. குழந்தைகள் தற்காலத்தில் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. படி என சொல்லியும் வீட்டிலேயே விளையாடு என்றும் அவர்களுக்கு பதின்ம வயதில் உடல் பருமன் அதிகரித்து இள வயதில் அதிக வியாதியின் இருப்பிடமாகிறார்கள்.
பெண்களும் தங்களுக்கு உண்டான உடல் வேலைகளை அசைவு பெற செய்வதில்லை. இதனால் 50% சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறார்கள். 50% அவர்களின் பிறப்பு தன்மை காரணம். சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.
தற்காலத்தில் எத்தனை பேர் தரையில் நீண்ட நேரம் உட்கார முடியும்? உணவருந்த டைனிங் டேபிள் உடல் அசையா வாகனம், தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சொகுசு சோபா என எதற்கும் உடலை வளைவு தன்மைக்கு கொண்டு செல்லுவதில்லை. வீட்டில் இருக்கும் மர சாமான்களுக்கு இணையாக நம்மிடமும் வளைவு தன்மை இல்லாமல் மரசட்டம் போல் இருக்கிறது. உடல் வளைவு தன்மை இல்லாத காரணத்தால் நோய் வருவதும், அந்த நோயை குணமாக முயற்சிக்கையில் உடல் மருத்துவத்தை ஏற்றுகொள்ளாத நிலையும் ஏற்படும்.
சரி........ நாகரீகம் என்றால் ஐந்திலும் வளைவதில்லை ஐம்பதிலும் வளைவதில்லை என்பது தானே?
ஹதயோகத்தின் உற்பிரிவுகளை கூறுகிறேன் என்றேன் அல்லவா அதை பார்ப்போம்.
ஆசனம் : உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். நமது உடலின் அனைத்து பகுதியையும் நாம் இயக்குவது இல்லை. அதனால் நமக்கு மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். பூனை, நாய் போன்ற விலங்குகள் தூக்கத்திலிருந்து எழுந்ததும் தங்களின் உடலை முறுக்கேற்றி உற்சாகம் ஆக்கிக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். அது போல விலங்குகள், இயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.
பிராணாயாமம் : பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்தி நமது உயிர்சக்தியையும் மேம்படுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என பெயர்.
முத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட சைகை முறையில் வைப்பது முத்திரை எனலாம். இறைவனின் விக்ரஹங்களில் அவர்கைகளில் ஒரு வித சைகை இருப்பதை பார்த்திருப்போம். உதாரணமாக அம்மன் விக்ரஹத்தில் உள்ளங்கள் நம்மை பார்த்துகாட்டி ஆசிர்வதிப்பதை போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை என பெயர்.
[முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...! ]
பந்தங்கள் : நமது சுவாசம் மற்றும் உடலில் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தி அல்லது கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்த சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலுசேர்க்கும். வட மொழியில் பந்தா என இதற்கு பெயர். யோகிகள் காட்டும் ஒரே 'பந்தா' இது தான்.
கிரியா : கிரியா என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியா என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் என பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை, அதை தக்க முறையில் தூய்மையாக்க ஆறு வழிகள் ஹடயோகம் கூறுகிறது. இவை ஷட்கிரியா என வழங்கப்படுகிறது.
ஹதயோகம் என்றவுடன் தலைகீழாக நிற்பது கடினமாக உடலை வளைப்பது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். இயல்பான வாழ்க்கை நிலையில் ஒருவர் ஹதயோகத்தை செய்ய முடியும். மேலும் ஹதயோகம் மொழி, மதம், ஜாதி என எதற்கும் சார்ந்தது இல்லை. உடல் இருப்பவர்கள் யார் செய்தாலும் வேலை செய்யும். அதனால் தான் ஹதயோகம் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவ முறைக்காக மட்டுமே உபயோகப்படும் ஹதயோகத்தை யோகசிகிச்சை என பெயர். ஹதயோகம் மருத்துவ முறைக்கானது மட்டுமல்ல அதனால் எண்ணிலடங்கா பலன்கள் உண்டு.
ஹதயோகத்தை பயன்படுத்தும் அவசியத்தை பற்றி ஏனைய நூல்கள் கூறினாலும், ஹதயோக பரதீப்பிகா எனும் நூல் ஹதயோகம் செய்யும் முறையை விரிவாக அலசுகிறது. இந்த நூல் ஐயாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதிலிருந்து நமது நாட்டின் தொன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் பதஞ்சலி முனிவர் ஆசனம் செய்வதின் அவசியமும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஒற்றை வரியில் சொல்லிகிறார்.
“ஸ்திரம் சுகம் ஆசனம்”
உங்களை தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உங்கள் உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் உங்களை வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.
தற்கால நவநாகரீக உலகில் உணவு முறை என்பது துரித உணவின் தாக்கத்தால் சீரிழிந்து வருகிறது. உடலையும், மனதையும் பேணிக்காப்பதால் மட்டுமே சிறந்த ஆன்மீக வளர்ச்சி அடைய முடியும்.
சிறிது நேரம் தியானத்தில் உற்காருவதற்குள் கால்கள் மரத்து போவது, உடல் பிடிப்பு ஏற்படுவது, கீழே உற்கார உடல் ஒத்துழைக்காதது என பல பிரச்சனைகளுக்கு ஹதயோகம் தீர்வாகும். இதனால் தான் எனது யோக பயிற்சி முறையில் ஹதயோகத்துடன் அனைத்து யோக முறையும் இணைத்துள்ளேன்.
சிறந்த யோக ஆசிரியரை நாடி, உங்கள் வயது வாழ்க்கை சூழலுக்கு தக்க ஹதயோக பயிற்சியை தினமும் செய்யுங்கள். ஹதயோக ஆசனங்களை செய்து உங்கள் உடலை இறைவன் இருக்கும் அரியாசனமாக்குங்கள். ஹரி அந்த ஆசனத்தில் நிரந்தரமாக வீற்றிருப்பான்.
No comments:
Post a Comment