பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட
அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது.
இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார்.
இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில்
உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின்
தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான
மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு
ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
என்று சித்தர் பாடுகிறார். பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு,
தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது
அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது
பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில்
உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.
பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய
காரணமாகிறது. சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது,
காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு
உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம்,
கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங்களுள்
அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள்
தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனித
உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம்
என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில்
உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு
தொடர்புடைய தாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான்
மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை
கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது
மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும்,
மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை
என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை
என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
சூரிய சக்தி - தமரகம் (இதயம்)
சந்திர சக்தி - மூளை நரம்புகள்
செவ்வாய் - பித்தப்பை, இரத்தம் (செந்நீர்)
சுக்கிரன் - இடுப்புப் பகுதி
புதன் - நுரையீரல்
குரு (வியாழன்) - கல்லீரல்
சனி - மண்ணீரல்
ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்திரங்களின்
ஆதிக்கத்தைப்பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.
பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த
கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை
மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில்
மாற்றங்களை ஏற்படுத்தி இயக்குபவர்களும் இவர்களே.பிரபஞ்சத்தில்
மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து
கொள்பவனாகவும் இருக்கிறான். இதையே ஒளவையார்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடினார்.
இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும்
சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும்
வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை
அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த
கால ஒளியின் மூலம் இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக
அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு
மண்டலங்கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல்
ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியிலும் நிறைந்துள்ளது.
ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது.
இதைத்தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும்
மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை
துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத
பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது.
பிரபஞ்சத்தில் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும்
வாத பித்த கப மாறுபாடு ஏற்படுகிறது.
இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
இப்படிப்பட்ட கோள்களின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு
அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக்
காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம்
போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.
மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே
சித்தர்கள் கூறுகின்றனர்.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் செயல்படுகிறது.
ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின்
செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.இத்தகைய உடலை
இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம்
மூலமே அறிந்துகொள்ள முடியும்.சித்தர்கள் தங்களின்
தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு
மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில்
உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு
கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம்
என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில்தான் உடலில் பஞ்ச பூதங்களின்
செயல்பாடுகளுக்கும், கோள்களின் ஆதிக்கத்திற்கும்
நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர் இதைத்தான்
சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்
தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த
ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும்
பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில்
அமைந்துள்ளது என சித்தர்கள் கூறுகின்றனர்.ஆகையால்தான்
தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக
கொண்டுள்ளது.திருவள்ளுவர் தன்னுடைய திருக் குறளில்
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
என்று பாடியுள்ளார்.சிலர் திருவள்ளுவர் இறைவணக்கம்
பாடவில்லை என்று கூறுவர். ஆனால் அகர என்ற சொல்லே
இறைவனை வணங்கும் முதல் சொல்லாகும்.
மனித உடலின் பிரபஞ்சத்தை நன்கு அறிந்து அதனையே
முதல் குறளில் முதல் வரியாகவும் இறைவணக்க
பாடலாகவும் பாடியுள்ளார்.
அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்த்திடவே ஆகும் முக்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப்பார்த்து
குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன்
முக்கோண நிலையதாமே சித்தர் பாடல்
“பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்”
இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி
என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்து
விட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை
அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம்
கிடைக்கும் என்கின்றனர்.மேலும் அவர்கள்
அம் என்று இரு
இம் என்று இரு
உம் என்று இரு
என்று கூறுகின்றனர். பிராண வாயுவின் செயல்பாடுகள்
இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில்
பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்
படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதாவது
குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன்
வாயு அடங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து
சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது.
இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின்
ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.சாதாரணமாக
மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தியாகிறது. இந்த
கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும்
நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர்.
இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன்
அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான
நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது...
மாறுபடுகிறது.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணைப்
பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப்
பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி
உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும்.
அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது,
இனிமையான பாடலைக் கேட்கும்போது
பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது
உடலில் மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர்
உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து
செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.
மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி
ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது
கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது.
இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தியாகும்
கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.ஒருவரை
பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர்
அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கிறது.
அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக
வெளிவருவதற்கும், துக்கமடையும்போது கண்ணீராக
வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம். இந்த
கிலேச நீர் வாத, பித்த கப உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு
எவ்வாறு மாறுகிறது, அப்படி மாறும்போது உடலில் அதிக
மாற்றம் உருவாகிறது.
ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல்
மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம்
என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே
பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.இந்த பஞ்ச பூதங்கள்
எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின்
செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.
இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான்
மனித உடல் எனும் பிரபஞ்சம்.
நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்
நேரான தேயுவோடு வாயுமாகும்
அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்
அரிதான பிருதிவியு மண்ணு மாகும்
தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு
தாக்கான வாயுவது காற்றுமாகும்
இகழ்ந்தவா காயமது சத்தமாகும்
ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே
-யூகி வைத்திய சிந்தாமணி
மண்ணின் கூறுகள்
மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல்,
நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண்
கூறு கொண்டவை.பிருத்திவியில்பிருத்திவி அதாவது மண்ணில்
மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன்
நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு
சேர்ந்து உருவானது தோல்என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து
உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து
உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.
நீரின் கூறு (புனலின் கூறு)நீரின் தன்மை கொண்டவை இரத்தம்,
விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல்
என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது
சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானது
தான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது
எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்)
உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால்
உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள்
குறிப்பிட்டுள்ளனர். நெருப்பின் கூறு உணவு, தூக்கம், அச்சம்,
சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை
தேயு (தீ) என அழைக்கின்றனர்.நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்
போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும்
போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது
தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது
அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்
போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.
வளியின் (காற்று) கூறுஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல்,
படுத்தல்.வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும்
என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி)
சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது
நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்
போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம்
சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.விண்ணின் (ஆகாயம்) கூறுஇன்பம்
(காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்),
பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)விண்ணின்
தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும்,
ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும்,
ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும்,
ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும்,
ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும்
குறிப்பிடுகின்றனர்.மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை
சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.மண்ணின் தன்மையால் மயிர்
வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன்
செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.இவ்வாறு
பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல்
உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.இதே கருத்தையே
ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும்
கோவில்கள் அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)
திருவாணைக்கால் நீர்
திருவண்ணாமலை நெருப்பு
காளஹஸ்தி காற்று
சிதம்பரம் ஆகாயம். பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக
வணங்கி வரச் செய்துள்ளனர்
-
No comments:
Post a Comment