Wednesday, July 20, 2011

ஜென் கதை

பல போர்களை வென்ற ஒரு ராணுவத் தளபதி, தன் வீட்டில் பழமையான ஒரு கண்ணாடிப் பொருளைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அந்தப் பொருள் அவர் கையில் இருந்து நழுவிவிட்டது. ஒருகணம் தவித்துப்போன அவர் அது தரையைத் தொடும் முன் எப்படியோ பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.


"எத்தனையோ ஆயுதங்களுக்கு எதிராக நின்றபோதுகூட பதைக்காதவன் இச்சிறு பொருளுக்காக ஏன் பதைத்தேன்?" என்று ஒருகணம் யோசித்தார் தளபதி.

அவர் முகத்தில் திடீர் என்று ஒரு புன்னகை முளைத்தது. அந்தக் கண்ணாடிப் பொருளை வீசி எறிந்து உடைத்தார்.

விளக்கம்:

"வாழ்க்கையின் பெரும்பான்மையான தருணங்களில் நீங்கள் ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதினால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில்கூட சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ அடையாளப்படுத்தி, அதன் மீது உங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூட அவசியம் இல்லை.

எல்லா அடையாளங்களையும் தாண்டி இருக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல்படுகிறது. குறுகலான வரையறைகளைத் தாண்டி காலெடுத்துவைக்கையில், நினைத்துப்பார்க்காத விஷயங்கள்கூட சாத்தியமாகின்றன.

எல்லை இல்லாத உயிரைப்போய் உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அட, மனதில் தோன்றும் எண்ணங்களுடன்கூட உங்களுக்கு அடையாளம் வந்துவிட்டது. நீங்கள் உருவாக்கிய உணர்வுடன்கூட அடையாளம் பிறந்துவிட்டது.

எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கையில், வேதனைகள்தாம் வரும். உங்கள் பதவி, நீங்கள் கட்டிய வீடு, உங்கள் உடைமைகள், நடுவில் வந்த உறவுகள், நண்பர்கள் என்று எல்லாவற்றுடனும் ஓர் அடையாளம் உங்களைப் பிணைத்துப்போடுகிறது. அந்த அடையாளங்களுடன் சிக்கிப் போராடுகையில் தேவையற்ற பதைப்பு வரத்தான் செய்யும்.

இதேரீதியில் ஒரு சிறு கண்ணாடிக் கோப்பையுடன்கூட தன்னைத் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டதால் ஏற்பட்ட பதைப்பை உணர்ந்த தளபதி, அதில் இருந்து விடுபடும்விதமாக அதை வீசி எறிந்து நொறுக்குகிறார்.

நீங்கள் வீசி எறிய வேண்டியது, கண்ணாடிப் பொருட்களை அல்ல; உங்கள் அடையாளங்களை!"

No comments:

Post a Comment