Thursday, July 21, 2011

கந்தபுராணம் பகுதி 9.2



அனைத்தும் அறிந்த முருகன், அப்பெண்களைப் பற்றி ஏதுமறியாதவர் போல, பெண்களே ! நீங்கள் யார் ? எதற்காக என்னை குறித்து தவமிருந்தீர்கள் ? என்றார். ஐயனே ! இந்த அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், தங்களைப் போல் கருணையுள்ளவரும், அழகானவருமாக யாருமில்லை. கருணைக்கடலே ! நாங்கள் கேட்கும் வரத்தை எங்களுக்கு மறுக்காமல் தர வேண்டும், என்றனர். அதற்கென்ன தருகிறேனே. என்ற முருகனிடம், அவர்கள் ஏதும் கேட்கத் தோன்றாமல் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றனர். பெண்ணே மாப்பிள்ளையிடம் தன் காதலைத் தெரிவிப்பது என்பது இந்தக்காலத்தில் ஏற்பட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். முருகப்பெருமானே காதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் தான் ! அப்பெண்களின் விருப்பத்தை அறிந்த முருகன், அவர்களை அணைத்துக் கொண்டார். கன்னியரே ! என் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை நானறிவேன். ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். என் பிறப்பின் நோக்கம் உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக அல்ல ! சூரபத்மனை அழிப்பதற்காக என் தந்தை என்னைப் படைத்தார். மேலும், காதலுக்கு பெற்றவர்கள் அங்கீகாரம் தர வேண்டும். முதலில், பெற்றவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பெற்றவரைப் பகைத்து ஏற்படும் காதல் நிலைப்பதில்லை. எனவே, நம் காதல் கனிந்து திருமணம் ஆகும் வரை. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், என்றார். அந்தக் கன்னியர் அவரது திருவடிகளில் விழுந்து, அவரது கட்டளைக்கு அடிபணிவதாகவும், அவரது பணி முடியும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முருகன் அமிர்தவல்லியிடம், அமிர்தா ! நீ தேவலோகம் செல். தேவலோகத் தலைவன் இந்திரனின் மகளாக வளர்ந்து வா.
உன் சகோதரி சவுந்தர்யா, பூலோகம் சென்று, அங்கே ஆஸ்ரமம் அமைந்திருக்கும் சிவமுனிவரின் மகளாக வளர்ந்து வரட்டும். சூரபத்மவதம் முடிந்த பிறகு, உங்களை நான் மணந்து கொள்கிறேன், என்றதும். அப்பெண்கள் மகிழ்வுடன் தலையசைத்தனர். பின்னர் முருகன் தன்வடிவத்தை மாற்றிக் கொண்டு, பாலமுருகனாகி கைலாயம் சென்றார். அவரை அள்ளியெடுத்த பார்வதி, பரமேஸ்வரர் அவரைத் தங்கள் நடுவில் இருத்திக் கொண்டனர். இக்காட்சியைக் காண தேவர்களும், முனிவர்களும் ஓடோடி வந்தனர். காணக்கிடைக்காத சோமாஸ்கந்த வடிவத்தை கண்ணாரக்கண்டு மகிழ்ந்தனர். (இப்போது கூட சில கோயில்களில், முருகன் சன்னதி நடுவில் இருக்க, சிவ, பார்வதி சன்னதி இருபுறங்களிலும் இருப்பதைக் காணலாம். தமிழகத்தில் மிகப்பெரிய சோமாஸ்கந்த சன்னதி. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ளது) இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், சிவபெருமானிடம், ஐயனே ! முருகப்பெருமான் தங்களுக்கு பாலனாகவும், வெளியே வந்தால் சுப்பிரமணியராய் விஸ்வரூபம் எடுக்கும் அபார சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார். அவரைக் கொண்டு சூராதிசூரர்களை வேரறுக்க வேண்டும். தேவருலகம் பாதுகாக்கப்பட வேண்டும், என்றனர். ஒருவன் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், அவனிடம் ஏதாவது கேட்டால், உடனே கொடுத்து விடுவான். கணவனின் மகிழ்ச்சியான சூழலைப் பயன்படுத்தி மனைவியும், மனைவியின் மகிழ்ச்சியைப் பயன்படுத்தி கணவனும் காரியம் சாதித்துக் கொள்வார்கள் இல்லையா ? அதுபோல், தேவர்களும் சமயம் பார்த்து கேட்ட கோரிக்கை உடனே ஏற்கப்பட்டது. சிவபெருமான் தன் மைந்தனிடம், முருகா ! உன் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகியோரை அழிப்பது மட்டுமல்ல. அவனது வம்சத்தில் ஒருவர் கூட இந்த பூமியில் வாழக்கூடாது.
பலலட்சம் அசுரர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிழைத்திருந்தால் கூட உலகிற்கு ஆபத்து. அவர்களை வேரறுத்து விட வேண்டும், என்றதுடன், அவரது 12 கைகளுக்கும் பொருந்தும் வகையில் 12 ஆயுதங்களையும் லட்சம் குதிரைகள் இணைந்து இழுக்கக்கூடிய தேரையும் கொடுத்தார்.பார்வதிதேவி தன் மகனைத் தழுவி, பாலகனே ! நீ பகைவர்களை அழித்து, வெற்றி வேலனாக திரும்பி வா, என ஆசியளித்தாள். முருகனின் மாமா விஷ்ணு, சிவனால் வழங்கப்பட்ட தேர்களின் குதிரைகளை ஓட்ட சாரதியாக வாயுதேவனை நியமித்தார். காற்றினும் கடுகிச் செல் என்று சொல்வதை இசைத்தான். காற்றை விட வேகமான ஊடகம் உலகில் வேறு ஏதுமில்லை. எனவே முருகனுக்கு வாயுவே சாரதியாக அமர்த்தப்பட்டான். பிரம்மரிஷி வசிஷ்டரும், தேவரிஷி நாரதரும் முருகனை மந்திரங்கள் சொல்லி ஆசிர்வதித்தனர். தேவதச்சனான துவஷ்டா, முருகனின் படைத்தளபதி வீரபாகு உள்ளிட்ட மற்ற சேனாதிபதிகளுக்கு தேர்களை வழங்கினார். அவற்றை சிங்கங்கள், யானைகள் இழுத்துச் சென்றன. வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷம் எங்கும் முழங்க, புழுதியைக் கிளப்பிக் கொண்டு படைகள் கிளம்பின. சூரர்கள் ஆட்சி செய்யும் மாயாபுரி பட்டணத்தை அடையும் முன்பாக ஒரு பெரிய மலையை படைகள் அடைந்தன. அப்போது, நாரதர் முருகனிடம் சுப்பிரமணியா ! இதை மலையெனக் கருதாதே. அகத்தியரிடம் ஒரு காலத்தில் ஒரு அசுரன் சேஷ்டை செய்தான்.

No comments:

Post a Comment