Thursday, April 5, 2012

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 4


ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். இந்திய மகான்களைத் தரிசிக்கவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. வெங்கடரமணி பால்பிரண்டனிடம்,காஞ்சிப்பெரியவர் ஒரு உண்மையான துறவி. பாதயாத்திரையாக இந்தியா முழுவதும் சென்று ஆன்மிக கருத்துக்களைப் பரப்பி வருபவர். யோக மார்க்க உண்மைகளை நன்கு அறிந்தவர். நீங்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார்.அப்போது பெரியவர் செங்கல்பட்டில்  முகாமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால்பிரண்டன் பெரியவரை சந்தித்த நிகழ்ச்சி, பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்றதைப் போல அமைந்தது. பிரண்டன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக சந்தேகங்களுக்குரிய விடைகளை பெரியவரிடம் இருந்து பெற்றார். அவரிடம் பெரியவர், திருவண்ணாமலையில் இருக்கும் ரமணமகரிஷியையும் சந்தியுங்கள், என்றார். ரமணரையும் சந்தித்து பால்பிரண்டன் ஆசிபெற்றார். பால்பிரண்டன் காஞ்சிப்பெரியவரிடம் தான் பெற்ற அனுபவத்தை தன் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இப்பெரியவரை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவே இல்லை. இம்மகான் பீடாதிபதியாக இருந்தாலும், அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லாவற்றையும் துறந்தவர். அவருக்கு அளிக்கும் காணிக்கைகளை எல்லாம் தகுதியுடையவர்களுக்கே பங்கிட்டு அளிக்கிறார். அவரது அழகிய உருவத்தை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
நான் செங்கல்பட்டில் தங்கியிருந்த நாளில் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். சுவாமிகளை மறுபடியும் தரிசிக்க வேண்டும்என்ற ஆவல் என்னுள் உதித்தது. அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கண்டு பெருமை கொண்டேன். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஆழமாக இருந்தது. அவர்கள் வேறு எந்த சிந்தனையிலும் நாட்டம் செலுத்தவில்லை. அன்று இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். படுத்திருந்தபோது, என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் அனைத்தும் முறுக்கேறி இருந்தது. யாரோ என்னை இழுப்பது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றி மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். எனது பக்கத்தில் வெளிச்சம் தோன்றியது. மிகுந்த பரபரப்பான நான் எழுந்தபோது, மகாசுவாமிகளின் உருவத்தைக் கண்டேன். அதில் எந்தவித ஐயமும் இல்லை. கருணையை வெளிப்படுத்தவே அவர் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். தாழ்மையுடன் இரு; நீ கோருவதை எல்லாம் அடைவாய் என்று அவர் கூறுவதை என் காதுகள் உணர்ந்தன. அதன்பின் அந்த உருவம் மறைந்து விட்டது. மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை எப்போதும் என் மனம் நினைத்துக் கொண்டே இருந்தது, என்று எழுதியிருக்கிறார். பால்பிரண்டனுக்கு கிடைத்த மகாபெரியவரின் அருள்பார்வை நமக்கும் கிடைக்கட்டும்.

No comments:

Post a Comment