Monday, April 23, 2012

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5


காஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது.  டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை 5 மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள்  வந்த நேரத்தில் பெரியவர்  வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறுமணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்கமுடியும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகிவிட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை.
இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில், ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால், திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட சுவாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் சுவாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுவாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திரவாழ்வு வாழவேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார்.இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில்,துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர்நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மகாபெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன்.இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்தபிறகு நான் ஒரு சிறைஅதிகாரி என்ற எண்ணமே மறந்துபோனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என்வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment