Saturday, March 10, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 10/03/2012


சித்தர் மரபில் குருவிற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. சித்தர் மரபுப்படி குண்டலினி யோகமோ அல்லது அதுபோன்ற ஆன்மிகப் பயிற்சிகளோ குருமுகமாக மட்டுமே கற்றுணரத்தக்கவை. பெரும்பாலும் எல்லாச் சித்தர்களும் தங்களுடைய குரு பரம்பரையைப் பற்றிப் பேசுகிறார்கள். தமிழ்ச்சித்தர்கள் மூலவர்க்கம் என்ற ஒரு பரம்பரையைக் குறிப்பிடுகிறார்கள். இப்பரம்பரையில் கணபதியோ திருமூலரோ மூலகுருவாகக் கருதப்படுகிறார். பாலவர்க்கத்தில் முருகனே மூலகுருவாக விளங்குகிறான். கயிலாய வர்க்கத்தில் சிவபெருமானே குருநாதனாகத் திகழ்கிறான்.
திருமந்திரத்தில் 67ஆம் பாடல் குருபரம்பரை பற்றியும் 91ஆம் பாடல் திருமூலர் கயிலாய பரம்பரையில் தோன்றியவர் என்றும் கூறுகிறது. குருவே மோட்சத்தை அடைவதற்குரிய படிக்கட்டின் முதற்படியாக விளங்குகிறார். தாந்திரிக யோகமுறையில் குருவானவர் மனித வடிவில் தோன்றி சாதகனுக்குத் தந்திரப் பயிற்சிகளில் உதவுகிறார். அந்த வகையில் அவர் மிகவும் இன்றியமையாதவராக விளங்குகிறார். “குரு” என்னும் சம்ஸ்கிருதச் சொல் “கு” “ரு” என்ற இரண்டு சொற்களின் அடிப்படையில் தோன்றியதாகும். “கு” என்றால் இருள். “ரு” என்றால் ஒளி. குரு தன் சீடனின் அறியாமை இருளை அகற்றி உண்மை ஒளியைத் தோற்றுவிப்பவர். ஆன்மிகக் கண்களைத் திறந்து வைப்பவர்.

           குருவென் பவனே வேதாக மங்கூறும்
           பரஇன்ப னாகிச்சிவயோகம் பாவித்து
           ஒருசிந்தை இன்றி உயர்பாச நீக்கி
           வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே

என்று திருமந்திரம் குருவினுக்கு விளக்கம் கூறுவதைக் காண்கிறோம்.

No comments:

Post a Comment